×

55வது நாச்சிமுத்து கவுண்டர், பெண்களுக்கான 19வது சிஆர்ஐ பம்ப் கோப்பைக்கான கூடைப்பந்தாட்டப் போட்டி கோவையில் துவங்கியது

கோவை : கோவை மாவட்ட கூடைப் பந்துக் கழகம் சார்பில் ஆண்களுக்கான 55ஆவது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான 19ஆவது சிஆர்ஐ பம்ப் கோப்பை போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியம் அருகேயுள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியை கோவை மாநகராட்சியின் துணை மேயர் வெற்றி செல்வன் துவக்கி வைத்தார். வரும் ஜூன் 3ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில் நாடு முழுவதுமிலுருந்து 15கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் அணியை எதிர்த்து திருவனந்தபுரம் கேரள மின்வாரிய அணி விளையாடியது. இதில் கேரள மின்வாரிய அணி 70 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பாக விளையாடிய சரத் 24 புள்ளிகளும், ராகுல் சரத் 23 புள்ளிகளும், சுஜீத்நாத் 7 புள்ளிகளும் எடுத்திருந்தனர். எதிர்த்து விளையாடிய சென்னை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் அணி 64 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணி சார்பாக விளையாடிய சூர்யா 20 புள்ளிகளும், ஆனந்த ராஜ் 12 புள்ளிகளும், கார்த்திக் 12 புள்ளிகளும் எடுத்திருந்தனர்.

இரண்டாவது போட்டியில் தில்லியைச் சேர்ந்த இந்தியன் ரயில்வே அணி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கேரள போலீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியன் ரயில்வேஸ் அணி 72 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் பிரவீன் குமார் 15 புள்ளிகளும், விஜய் 13 புள்ளிகளும், கம்ரான் கான் 12 புள்ளிகளும் எடுத்தனர். இவர்களை எதிர்த்து விளையாடிய கேரள போலீஸ் அணி 58 புள்ளிகள் பெற்று தோல்வியைடந்தது. அந்த அணி சார்பில் அந்தோணி ஜான்சன் 18 புள்ளிகளும், முகமது சிராஜ் 17 புள்ளிகளும், பிரேம் பிரகாஷ் 11 புள்ளிகளும் எடுத்திருந்தனர்.

மூன்றாவது போட்டியில், லோனாவாலா இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து அணி விளையாடியது. இதில் கப்பல் படை அணி 101 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணி சர்பாக விளையாடிய கெளரவ் சாண்டெல் 29 புள்ளிகளும், அக்கிலேஷ் குமார் 18 புள்ளிகளும், மந்தீப் சிங் 14 புள்ளிகளும் எடுத்தனர். இவர்களை எதிர்த்து விளையாடிய  கோவை மாவட்ட கூடைப்பந்து அணி 69 புள்ளிகள் எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணி சர்பாக விளையாடிய நரேஷ் 15 புள்ளிகளும், மணிகண்டன் 13 புள்ளிகளும், நவநீத் 12 புள்ளிகளும் எடுத்திருந்தனர்.

நான்காவது போட்டியில், புது டில்லி, இந்திய விமானப்படை அணியை எதிர்த்து பெங்களூரு பேங்க் ஆப் பரோடா வங்கி அணி விளையாடியது. இதில் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா வங்கி அணி 82 புள்ளிகள் பெற்று வெற்றி அடைந்தது. அந்த அணி சார்பாக விளையாடிய கார்த்திகேயன் 21 புள்ளிகளும், ஹரிஷ் 18 புள்ளிகளும், நாகராஜ் 13 புள்ளிகளும் எடுத்திருந்தனர். எதிர்த்து விளையாடிய இந்திய விமானப்படை அணி 78 புள்ளிகள் பெற்று தோல்வியடைந்தது. அந்த அணி சார்பாக விளையாடிய நிக்கில் 23 புள்ளிகளும், ரோகித் 13 புள்ளிகளும், ராஜன் 12 புள்ளிகளும் எடுத்திருந்தன்ர்.

19ஆவது சிஆர்ஐ பம்ப் பெண்களுக்கான முதல் போட்டியில் திருவனந்தபுரம் கேரள போலீஸ் அணியை எதிர்த்து சென்னை ரைசிங் ஸ்டார் அணி விளையாடியது. இதில் கேரள போலீஸ் அணி 70 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய ரைசிங் ஸ்டார் அணி 64 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது. கேரள போலீஸ் அணி சார்பில் அதுல்யா 18 புள்ளிகளும், ஐஸ்வர்யா சாபு 15 புள்ளிகளும் எடுத்தனர். ரைசிங் ஸ்டார் அணி சார்பில் ஸ்ருதி 26 புள்ளிகளும், மோனிகா 12 புள்ளிகளும், லட்சுமி 9 புள்ளிகளும் எடுத்தனர்.

இரண்டாவது போட்டியில் மும்பையைச் சேர்ந்த மத்திய ரயில்வே அணியும், கோவை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக அணியும் மோதின. இதில் மத்திய ரயில்வே அணி 66 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணி சர்பாக விளையாடிய காயத்திரி 27 புள்ளிகளும், ரிதிமா கேம்கர் 15 புள்ளிகளும், இஷிக்கா கலூத் 12 புள்ளிகளும் எடுத்திருந்தனர். கோவை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக அணி 62 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணி சர்பாக விளையாடிய சுஸ்மித்தா 20 புள்ளிகளும், அல்பியோ ஜான் 16 புள்ளிகளும், மகேஸ்வரி 14 புள்ளிகளும் எடுத்திருந்தனர்.

Tags : Nachimuthu Counter ,19th Basketball Tournament for Women 19th CRI Pump Cup ,Coimbatore , Coimbatore: Coimbatore District Basketball Association won the 55th Nachimuthu Counter Cup for Men and the 19th CRI Pump for Women.
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...